வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி - 10

பெரும்பாலும் உங்களுடைய ஒரு மாத சம்பளம் நிறுவனத்திடம் இருக்குமாறு, நிறுவனம் உஷாராக இருக்கும். நீங்கள் முடிவாக (EXIT) செல்லும்போது தான் உங்களுடைய சம்பள பிடித்தங்கள் அனைத்தும் கிளியர் செய்து அனுப்புவார்கள்.
உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் அதற்குரிய சம்பளமும் இல்லாமல் நீங்கள் வெளிநாட்டிற்கு வரக்கூடாது.
உங்களை அனுப்பும் ஏஜென்சிகள், உங்களுடைய அவசரத்தைப் பார்த்து. நீங்கள் அங்கு செல்லுங்கள். ஓவர்டைம் உண்டு, இன்கிரிமெண்ட் உண்டு என பொய் சொல்லி விமானத்தில் ஏற்றி அனுப்பி விடப் பார்ப்பார்கள்.
ஒப்பந்த பத்திரத்தில் (Agreement) அனைத்தும் உங்களுக்கு திருப்தியாக இருந்தால் ஒழிய கையெழுத்து இடக்கூடாது. அதே நேரம் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களும் அதில் கையெழுத்து இட்டிருக்கவேண்டும்.
எனக்குத் தெரிந்து, சவூதி அரேபியாவில் ஆடு மற்றும் ஒட்டகம் பராமரிக்க ஐடிஐ முடித்தவர்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி!
வெளிநாடு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்பது உண்மைதான்! அதற்காக அவசரப்படாமல், முறையாக நல்ல வேலை வாய்ப்பு நிறுவனங்களை அணுகி, சர்வீஸ் சார்ஜ் அதிகம் வாங்காத நல்ல நிறுவனங்கள் மூலம், நல்ல வேலையாக தேர்ந்தெடுத்து, நமக்கு உணவு தங்கும் இடம் இலவசமாக தரும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, சம்பளமும் சரியாக தரும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து வெளிநாடு வந்தால் நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் குடும்பமும் வசதியாக இருக்கும்.
சில நாடுகளுக்கு நாம் பணிக்குச் செல்வதை தவிர்த்து விட வேண்டும். குறிப்பாக மலேசியா, கொரியா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாம் பணிக்குச் சென்றால், இன்றும் அங்கு கொத்தடிமை முறை இருப்பதாக அங்குள்ள நண்பர்கள் மூலமாகவும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் அறிகிறோம்.
அப்படி செல்வதாக இருந்தால் கூட ஒரு தடவைக்கு பல தடவை.. நான் முன்பு சொன்ன இணைய தளம் மூலமாகவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, நமக்கு திருப்தி ஏற்பட்டால் தான் பணிக்குச் செல்ல வேண்டும்.
நம்பகத்தன்மை இல்லாத அயல்நாடு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சியை நம்பி அங்கு சென்று அவஸ்தை படக்கூடாது.
இன்னொரு முக்கியமான விஷயம். பெண்கள் அயல்நாடுகளுக்கு பணிக்குச் செல்லும்போது கூடுதல் விழிப்புணர்வு தேவை.
டாக்டர், நர்ஸ் போன்ற பணிகளுக்கு பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.
எந்த நாட்டிற்கும், வீட்டு பணிகளுக்கு என செல்லும்போது பெண்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாவதாக சொல்லக் கேள்வி. அதிக வேலைப் பளு, பாலியல் தொந்தரவுகள் போன்ற கொடுமைகளை அவர்கள் அனுபவிக்கிறார்கள். நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம்; சமயத்தில் அடி உதை ஆகியவையும் உண்டு.
எனவே பெண்களே உஷார்!
No comments:
Post a Comment