கோடித்துணி (முத்து ரத்தினம் )
-------------------- --------------------
இரண்டு நாளாக சாப்பாட்டுக்கே வழியில்லை . மனைவி கோமதி வேறு வள வள என
கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள் . என்ன செய்வது ? தனக்கோடிக்கு வெட்டியான் வேளை தவிர
வேறு தொழில் எதுவும் தெரியாது .
அவனுக்கென அவன் அப்பா விட்டுச் சென்ற வாரிசு வேலை தான் இது . ஆண்டவன்
படைப்பில் ஆயிரம் ரகங்கள் . ஒருவர் இறந்தால் அந்த இழப்பிலும் ஒருவனுக்கு ஆதாயம் .!
கடந்த ஒரு வாரமாக அந்த ஏரியாவில் யாரும் சாகவில்லை . கூலி வேலைக்கு கூட
தனக்கோடியை யாரும் கூப்பிடுவதில்லை .
இந்த லட்சணத்தில் அவனுக்கு இரண்டு குழந்தைகள் . பெரியவுளுக்கு நன்கு வயது ,
சின்னவனுக்கு இரண்டு வயது . தங்களுக்கு இல்லாவிட்டாலும் , குழந்தைகளுக்காவது சாப்பாட்டுக்கு
ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோமதிக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வயல்களில் வேலை கிடைக்கும் .
அதை வைத்து அரை வயிறு கஞ்சியாவது குடித்துக் கொண்டிருந்தார்கள் .
பஞ்சாயத்து தலைவரிடம் ட்ராக்டர் ஓட்டும் வடிவேலு வேக வேகமாக தனக்கோடி
வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான் .
அவன் வருவதைப் பார்த்து , தனக்கோடி மனைவி கோமதி தன் கணவனை வசைபாடும்
சுருதியை சற்று இறக்கி , " ஏனுங்க , ஏதாவது வேலையா ? தோட்டத்துக்கு ஆள் தேவையா ? - என
வடிவேலுவைக் கேட்டாள் .
" இல்ல புள்ளே ! நான் வந்தது வேற , நம்ம பஞ்சாயத்து தலைவரு அப்பாரு மண்டைய
போட்டுட்டாரு ," ஹார்ட் அட்டாக்காம் " - அதுதான் தனக்கோடிகிட்ட சொல்லி குழி வெட்ட வந்தேன் ."
" ஏய் , தனக்கோடி சீக்கிரம் வா , நான் இடத்தை காட்டுறேன் , இந்தா இதைப் புடி "- என
தன் மடியில் வைத்திருந்த ஒரு குவார்ட்டர் பாட்டிலை அவன் கையில் திணித்தான் , வடிவேலு.
தனக்கோடியின் முகத்தில் அவ்வளவு பிரகாசம் ! வீட்டின் உள்ளே சென்றவன் , மறைவில்
பெண்டாட்டியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே , சரக்கை ராவாக உள்ளே இறக்கினான் .
பின் , தன் பரிவாரங்களான கடப்பாரை , மம்பட்டியுடன் வடிவேலுவின் பின்னால்
நடையைக் கட்டினான் .
சுமார் மூன்று மணி நேரத்தில் , தன் கடமையைச் செய்துவிட்டு , குழிக்கருகில் " அப்பாடா "
என அமர்ந்தான் , தனக்கோடி .
சரக்கு அவனது களைப்பை சிறிது குறைத்தது .
பஞ்சாயத்து வீட்டில் தாரை , தப்பட்டையுடன் தலைவரின் அப்பாரு , மீளமுடியாத
உலகத்திற்குச் செல்ல , பூ அலங்காரங்களுடன் தேர் ரெடியாகிக் கொண்டிருந்தது .
மாலை நான்கு மணி வாக்கில் , வடிவேலு இடுகாட்டிற்கு வந்தான் . குழி ரெடியா என
பார்த்துவிட்டு , தனக்கோடியிடம் மறுபடியும் ஒரு குவார்ட்டரை நீட்டினான் .
" ஆஹா ! இன்று ஒரே மஜா தான் . இரவு நன்றாக தூங்கலாம் ."
வடிவேலு சென்றவுடன் பாட்டிலில் உள்ள சரக்கை உள்ளே தள்ளினான் , தனக்கோடி.
இன்று அமாவாசை நாள் . பொழுது சாய்வதற்குள் பிணம் இடுகாட்டுக்கு சென்று விட
வேண்டும் .
மள மளவென சாங்கிய , சம்பிரதாயங்கள் நடந்தன, பெருசும் பஞ்சாயத்து தலைவராக
இருந்தவர் தான் ! பரம்பரை பரம்பரையாக பஞ்சாயத்து குடும்பம் .
ஊருக்காக உழைத்தவர் என்பதால் ஊரே திரண்டு வந்து இரங்கல் கொண்டாடியது .
பிணம் தேரில் ஏறியது . இடுகாடு சென்ற வழி நெடுகிலும் பூக்களும் , காசுகளும் தேரின்
மீது இறைக்கப்பட்டன .
தேர் , குழி அருகில் இறக்கி வைக்கப்பட்டது .
தனக்கோடி , பவ்யமாக ஊர் பெருசுகளுக்கு கும்பிடு போட்டான் .
அதில் ஒருவர் , ' யாராவது மண்டையப் போட்டா , நம்ம தனக்கோடிக்கு தீபாவளி தான் ,
பாரு அவன் எப்படி மப்பும் மந்தாரையுமா திரியிறான் " -எனச் சொல்லி விட்டு சிரித்தார்.
உடனே தான் கையிலிருந்த துண்டை வாயில் வைத்து பொத்திக்கொண்டான், தனககோடி .
கடமைக்காக பஞ்சாயத்து , புதை குழிக்கு மண் தள்ளினார் . பிறகு வரிசையாக உறவினர்கள்
கைப்பிடி மண்ணை அள்ளி குழிக்குள் போட்டனர் .
தனககோடி , தன் கடமையை நிறைவேற்ற , மண்வெட்டியை எடுத்து மண்ணை தள்ள
ஆரம்பித்தான்.
கூட்டம் கலைய ஆரம்பித்தது.
கூட்டத்தோடு சென்று கொண்டிருந்த ஒருவன் , திரும்பி வந்து தனக்கொடியிடம் , "கொஞ்சம்
பொறுப்பா " - என்றவன் குழியில் எறங்கி , பிணத்தை போர்த்தி இருந்த கடைசி கோடித்துணியை
உருவி எடுத்துக் கொண்டு ," இப்ப மண்ண தள்ளப்பா " - என்று சொல்லி விட்டு தள்ளாடியபடியே
சென்று விட்டான் .
ஒரு நிமிஷம் தனக்கோடிக்கு ஒன்றுமே புரியவில்லை .
"என்னப்பா உலகம் இது ! பிறக்கும் போது தான் மனிதன் அம்மணமாக பிறக்கிறான் .
போகும் போதாவது ஒரு முழ துணி கட்டிக் கொண்டு போக விடமாட்டேன் ,என்கிறார்களே ! "
கலி காலம் என்பது சரி தான் !?
பெருசு இந்த ஊருக்கு எவ்வளவோ செய்துள்ளார் . எப்படியோ வாழ்ந்தவர் ,இன்று
ஒரு கோடித்துனிக்கு கூட வழியில்லையா ?
அவ்வளவு போதையிலும் நிதானம் இழக்கவில்லை , தனககோடி .
" நிதானம் இழந்தவன் துணியை உருவியவன் தான் ."
தனககோடி தான் கட்டியிருந்த பழைய வேட்டியை உருவி , பிணத்தின் மீது போர்த்தினான் .
அவன் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது எப்பவுமே அவன் பட்டா பட்டி
ட்ராயர் அணிந்திருப்பான் .
குழியை நிரவி விட்டு , தலைமாட்டில் கல்லை வைத்து விட்டு , வீட்டிற்கு
நடையைக் கட்டினான் , தனககோடி .
அவனைப் பார்த்த அவன் மனைவி கோமதி , " அடப்பாவி மனுசா " , இருந்த
ஒரு வேட்டியையும் தொலைத்துவிட்டு வந்துட்டியே , குடிச்சுட்டா வேட்டி அவுந்தது
கூடவா தெரியாது ? " - என்றபடியே அவனை வலுக்கட்டாயமாக உட்காரவைத்து ஒரு
குடம் தண்ணீரை அவன் தலையில் கொட்டினாள் .
தனக்கோடியின் முகத்தில் ஒரு பெருமிதம் !
" பெருசுக்கு நானும் ஒரு சொந்தக்காரன் ஆகி விட்டேன் , அவருக்கு கோடித்துணி போட்டு !!"
------------------------------------------------------------
Download As PDF
No comments:
Post a Comment