நிலம்
---------------
(முத்துரத்தினம் )
--------------------------
என் தாத்தா அந்தக் காலத்தில் பெரிய மிராசுதார் . மாணிக்கம்பாளையம் கிராமத்தில்
அவர் வைத்ததுதான் சட்டம். சுற்றியுள்ள கிராமத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் ஊர்க்கவுண்டர்.
நல்ல குமார கவுண்டர் என்றால் மிகப்பிரபலம் .
அவரிடம் உள்ள கெட்ட பழக்கங்கள் சில. அவற்றுள் ஒன்று குதிரையில் பயணம் செய்வது.
பயணம் செய்வது தவறு இல்லை. ஆனால் தினம் ஒரு குதிரை வாங்குவார் .அது தான் தவறு .
அதில் சுமார் இருபது கிலோமீட்டர் தூரம் உள்ள ஈரோடு வரை சென்று திரும்புவார் .
அந்தக் காலத்தில் பேருந்துகள் ஒன்றிரண்டு ஓடினாலும் அவர் பேருந்தில் ஏற மாட்டார் .
பேருந்தை முந்திக்கொண்டு குதிரையில் செல்வார். அதில் அவருக்கு பெருமிதம். யார் கண்டார்கள் ?
ஒரு வேளை என் தாத்தாவுக்கும் , தாத்தா குறுநில மன்னராக இருந்திருப்பார் போலும் .
இப்படி பணத்தை கண்டபடி செலவழிப்பதும், குடிப்பதுமாக இருந்ததால் , இருந்த சொத்துக்கள்
கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தன . கூட இருந்த நண்பர்களும் பணத்துக்காகத்தான்.
என் தாத்தாவின் பலவீனத்தைப் பயன்படுத்தி , அவரிடமிருந்த நிலபுலன்களை அபகரித்தனர் பலர்.
இந்தவிதமான என் தாத்தாவின் செயல்களில் என் அம்மாயி ( பாட்டி ) தலையிடக்கூடாது !
அப்படிக்கேட்டால் அடி உதை தான் .
நான்கு பெண் குழந்தைகளையும், ஒரு ஆண் பிள்ளையையும் வைத்துக்கொண்டு , என் அம்மாயி
பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல .
எல்லாச் சொத்துக்களும் போக , கடைசியில் ஓலை வீட்டில் படுத்த படுக்கையாகி விட்டார் , என் தாத்தா .
இதற்கிடையில் மூத்த இரண்டு பெண் பிள்ளைகளும் கல்யாணமாகி சென்று விட்டிருந்தனர் .
அதாவது என் பெரியம்மாக்கள்.
அடுத்தது என் அம்மா.
என் அம்மாவுக்கும் சுமாரான இடத்தில் , பக்கத்து கிராமமான ஊஞ்சப்பாளையம் என்ற ஊரில்
திருமணம் நடந்தது . கல்யாணத்தை பார்த்த கையோடு என் தாத்தா இறந்து விட்டார் .
என் அப்பா , வேலை தேடி , சொந்த கிராமத்தில் இருந்து , பக்கத்தில் உள்ள மேட்டூருக்குச் சென்று
மில்லில் சேர்ந்து விட்டார் .
ஓரளவு நல்ல வருமானம் . அப்பாவுக்கு என் தாத்தாவின் அதாவது மாமனாரின் நேர் எதிர் குணம் .
என் அம்மாவின் சொல்லை தட்ட மாட்டார் . வாங்கும் சம்பளத்தை அப்படியே அம்மாவிடம்
கொடுத்துவிடுவார்.
பிறகு தினசரி செலவுக்கு வாங்கிக் கொள்வார் . சரியான நேரத்திற்கு வேலைக்குச் சென்று
, வேலை முடிந்தவுடன் வீடு திரும்பி விடுவார்.
எனக்குத் தெரிந்து அவர் பார்த்த சினிமாக்கள் மிகக் குறைவு . நல்ல பக்திப்படங்களாக
இருந்தால் பார்ப்பார் .
என் அம்மாவும் , அப்பாவின் சம்பாத்தியத்தில் சிக்கனமாக செலவு செய்து , சீட்டு சேர்த்து
மாடு வளர்த்து பால் ஊற்றி , சேமித்து சொந்த வீடும் கட்டியாகி விட்டது.
இதற்கிடையில் என் அம்மாவே முன்னின்று கடைக்குட்டியான என் சின்னம்மாவிற்கு திருமணம்
நடத்தி வைத்தார். தான் தம்பிக்கும் , படிக்கவைத்து வேலைக்கும் ஏற்பாடு செய்தார்.
பிறகு மாமாவிற்கும் திருமணம் நடத்தி , எங்கள் வீட்டுக்கு அருகிலேயே மலிவாய் விலைக்கு வந்த
வீட்டையும் வங்கிக் கொடுத்தார் , என் அம்மா .
அது மட்டுமல்ல, எங்கள் பாட்டியையும் சொந்த கிராமத்திலிருந்து , மேட்டூருக்கு கூட்டி வந்தனர்
என் பெற்றோர் .
இவ்வளவு காரியங்களையும் ,தன் உடன்பிறந்தவர்களுக்கு செய்கிறாளே என் அம்மா என அதிருப்தி
கொண்டது கிடையாது என் அப்பா.
மாமாவையும், என் சின்னம்மாவையும் அவர் மைத்துனன், மைத்துனி என நினைக்காமல் ,
தன் பிள்ளைகளாகவே நினைத்தார்.
இதற்கும் மேலாக என் சின்னம்மாவுடைய மூன்று பிள்ளைப் பெருகளுக்கும் - தாய் வீடாக -
எங்கள் வீட்டிற்கு கூட்டி வந்து , பிரசவம் முடிந்தவுடன் , ஒவ்வொரு குழந்தைக்கும் டாலர் செயின்
அணிவித்து , திருப்பி புகுந்த வீட்டிற்கு தாயையும் , சேயையும் அனுப்பி வைப்பனர் , என் பெற்றோர் .
என் மாமாவிற்கு , என் அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம் . வளர்த்து ஆளாக்கியவராயிற்றே !
தாய் ஸ்தானத்தில் இருந்து அனைத்தும் செய்த அக்கா அல்லவா !
ஊரில் உள்ள நல்லது , கேட்டது அனைத்திற்கும் இருவரும் சேர்ந்தே செல்வார்கள்.
மாமாவும் , அம்மாவைப் போல சிக்கனமாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்.
எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். வெத்தலை , பாக்கு சில சமயம் போடுவார் .மற்றபடி என் தாத்தாவுக்கு நேர்
எதிர் குணங்கள் .
அம்மாவிற்கும் , மாமாவிற்கும் ரொம்ப நாட்களாகவே ஒரு வைராக்கியம் .
எங்கள் தாத்தா வாழ்ந்த கிராமத்திலேயோ அல்லது அருகிலோ நிலம் வாங்க வேண்டும் என்பதுதான் அது.
அந்த நாளும் வந்தது . மாணிக்கம்பாளையம் அருகில் , செவானூர் கிராமத்தில் மூன்று ஏக்கர்
நிலம் விலைக்கு வந்தது .
சிக்கலான சூழ்நிலையிலும் அம்மாவும், மாமாவும் அந்த இடத்தை விடவில்லை. என் அப்பாவின்
பெயரிலும் , மாமாவின் பெயரிலும் கிரயம் ஆயிற்று
அம்மாவுக்கும் , மாமாவுக்கும் வெற்றிப் பெருமிதம் .
நாங்கள் தோட்டத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் , மாமா மின் வாரியத்தில்
பணி புரிந்ததாலும் , தோட்டத்தை பராமரித்து விவசாயம் செய்ய முடியாதலால் , எங்கள் உறவினர்
ஒருவரிடம் ஒப்படைத்து பராமரித்து வந்தோம் .
நிலத்தில் நெல், கரும்பு , மஞ்சள் என பயிரிட்டு ஓரளவு வருமானமும் வந்து கொண்டிருந்தது .
என் அக்கா , அண்ணன் திருமணம் முடிந்து செட்டிலாகி விட்டார்கள்.
நானும் சொந்தம் போகாமலிருக்க ,என் மாமா பெண்ணையே திருமணம் செய்து இரண்டு
பையன்களும் பிறந்து விட்டார்கள் .
கடந்த சில மாதங்களாக , எங்கள் தோட்டத்தை பராமரித்து வருபவர் , வீட்டிற்கு வரும்
போதெல்லாம் ஒரு புகார் சொல்லிக் கொண்டு போவார் .
அதாவது ," எங்கள் பக்கத்து தோட்டக்காரர் அப்பா -சற்று வயதானவர் -எங்கள் தோட்டத்திற்கும் ,
அவர்கள் தோட்டத்திற்கும் இடையில் உள்ள வயல் வரப்பை சிறிது சிறிதாக வெட்டிக் கொண்டே
வருகிறார் -"- என்பது தான் அந்த புகாரின் சாராம்சம் .
சில சமயம் மாமாவும் , அம்மாவும் சென்று , எங்கள் உறவினர் சொல்வது சரியா எனப்பர்த்துவிட்டு ,
அவர் சொல்வது சரிதான் என தெரிந்து , பக்கத்து தோட்டக்காரரிடம் சண்டை போட்டு விட்டு திரும்பினர் .
எனக்கும் , என் அண்ணனுக்கும் தெரியப்படுத்தினார்கள் . நாங்கள் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.
ஒன்று , நாங்கள் அவரவர் வேளையில் பிசி . இரண்டாவது நாங்கள் உழைத்து , வியர்வை சிந்தி ,
கஷ்டப்பட்டு நிலத்தை வாங்காததினால் வந்த அசிரத்தையா என தெரியவில்லை ,!
எங்கள் உறவினர் , ஒரு நாள் நேராக எங்களிடமே வந்து விட்டார்.
" வர வர பக்கத்து தோட்டக்காரரின் தொல்லை அதிகமாகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக
மண்வெட்டியால் வரப்பை வெட்டி , தற்போது வரப்பில் நடக்கக் கூட முடியாமல் போய் விட்டது.
" உங்கள் அம்மாவிற்கும் , மாமாவிற்கும் வயதாகிவிட்டது, இனிமேல் நீங்கள் தான் பார்க்க
வேண்டும் . நீங்களும் கண்டும் காணாமல் இருக்கிறீர்களே ! உடனே வந்து ஆவன செய்யுங்கள்.
நான் ஏதாவது கேட்டால் என்னையே அடிக்க வருகிறார்கள் "- என புலம்பினார் .
எனக்கு சரியான கோபம் . மறுநாள் என்ன , ஏது என விசாரிக்க கிளம்பி விட்டேன்.
பொறுமையாகவே , பக்கத்து தோட்டக்காரரிடம் " நீங்கள் செய்வது சரியா " எனக் கேட்டேன்.
அதற்கு, " நீங்களே வாருங்கள் . இங்கு நின்று பாருங்கள் . இந்த எல்லைக்கல்லுக்கும் , கடைசி
எல்லைக்கல்லுக்கும் இடையில் உங்கள் நிலம் வளைந்து செல்கிறது . அதற்காகத்தான்
நாங்கள் வரப்பை வெட்டி நேர் செய்கிறோம் " -என்றார் .
"சரி , நாளை வருகிறேன் " -என அவரிடம் சொல்லி விட்டு ஏன் அம்மா , மாமாவிடம்
இது பற்றி விசாரித்தேன் .
மாமாவிற்கும் , அம்மாவிற்கும் என் மேல் சரியான கோபம் .அது அம்மாவின் பேச்சில்
தெரிந்தது.
" என்னடா , அவர்களை மிரட்டிவிட்டு வாடா என உன்னை அனுப்பினால் , அவர்கள்
சொன்னார்களாம் , இவன் நியாயம் பேச வந்து விட்டான் ."
" நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த நிலத்தை வாங்கியிருப்போம் . உனக்கு எப்படித்
தெரியும் ? நாம் நிலத்தை வாங்கி இருபத்து ஐந்து வருடங்களாகி விட்டது . வாங்கியது
வாங்கியபடி , அப்படியே நிலத்தில் வேளாண்மை செய்து கொண்டு இருக்கிறோம் ."
"அவர்கள் , நிலம் வாங்கி ஐந்து வருடங்கள் தான் ஆகிறது . அது பத்தாமல் , நம்
நிலத்தில் வேறு பங்கு கேட்க வந்து விட்டார்களோ ?"
என பொரிந்து தள்ளினார்கள் .
அன்று இரவு எனக்கு தூக்கமே எல்லை. மனதில் பல எண்ண ஓட்டங்கள் .
" மனிதன் பிறக்கும் போது எண்ண கொண்டு வருகிறான் . இறக்கும் போது என்ன உடன் கொண்டு செல்கிறான் "
" யாருக்கும் , யாருடையதும் சொந்தமில்லை . இன்று ஒருவருடைய சொத்து , நாளை வேறு
ஒருவருடைய கைக்கு சென்று விடுகிறது."
"உதாரணமாக , என் தாத்தாவின் சொத்தான நிலங்கள் , இன்று வேறு ஒருவருடைய கையில்.
நாளை யாருடைய கையிலோ ?! யாரறிவர் ?.
" பிறப்புக்கும் ,இறப்புக்கும் இடையில் மனிதன் தனக்கும், தான் சந்ததிக்கும் சொத்துக்காக
ஆளாய்ப் பறக்கிறான் ."
" யாருக்குமே , இது போதும் என்ற மன நிறைவு கிடையாது ."
" பெரிய பணக்காரனிலிருந்து , அன்னக்காவடி வரை நாளைக்காக சேர்த்து வைக்கிறான் ."
" மாறி வரும் இந்த உலகத்தில் எதுவும் , யாருக்கும் நிலையானதல்ல. நேற்று ஒருவர் கையிலும்
இன்று ஒருவர் கையிலும் , நாளை மற்றொருவர் கையிலும் மாறி, மாறி சுழன்று கொண்டே
இருக்கும் ."
" நாம் வாழும் பூமியே சுழன்று கொண்டிருக்கும் பொழுது , அதில் வாழும் நாமும் ஏற்ற ,
இறக்கங்களை , வாழ்க்கையின் மேடு ,பள்ளங்களை சந்த்க்கத்தனே வேண்டும். !"
" நம் உயுருள்ளவரை அனுபவிக்கலாமே தவிர , எந்த பொருளுக்கும் , நாம் சொந்தம்
கொண்டாட முடியாது. "
" உலகத்தில் பெரிய சந்தோசமே , அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பார்ப்பதுதான். "
ஒரு தீர்கமான முடிவோடு உறங்கிப்போனேன் .
மறு நாள் நான் மட்டும் தனியாக தோட்டத்திற்குப் போனேன்.
எனக்காக, என் முடிவுக்காக , பக்கத்து தோட்டக்கரரின் குடும்பமே காத்திருந்தது.
என் வயது ஒத்த , பெரியவரின் மகனைக் கூப்பிட்டேன் . அவர் தானே நிலத்தின் சொந்தக்காரர்.
நான் அவரிடம் " உங்களுக்குத்தேவை நம் இருவர் நிலத்திற்கும் இடையில் உள்ள வளைவு
நேராக வேண்டும் . அவ்வளவுதானே , கயிறு கொண்டு வாருங்கள் , நேராகப் பிடிக்கலாம் ."
என்றேன்.
அவர்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் ! சந்தோசம் ! என்னை நன்றிப்
பெருக்கோடு பார்த்தார்கள் .
அதற்குள் பெரியவர் " உங்கள் அம்மா, மாமா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் ?- என்றார்.
" அதற்கு நான் உத்திரவாதம் " -என்றேன் .
கயிறு கொண்டு வந்து நேராகப் பிடித்து , பின் வரப்பை அவரையே சரி செய்யச் சொன்னேன் .
வீட்டிற்கு வந்ததும் , நான் எதிபார்த்தபடி என் அண்ணன் , அம்மா , மாமா எவர்களிடம்
வாங்கி கட்டிக்கொண்டேன் .
" நாங்கள் வாங்கும் போது அன்றைய நிலத்தின் மதிப்பு மூன்று ஏக்கருக்கும் சேர்த்து
ரூபாய் அறுபதாயிரம் தான் ."
" இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூபாய் இருபது லட்சம் . நீ பாட்டுக்கு இடத்தை
தாரை வார்த்து கொடுத்து விட்டாயே ."
" என்னவோ , நீங்கள் தான் நாளைக்கு அனுபவிக்கப் போகிறவர்கள் . இப்படி இருந்தால்
நீ நாளைக்கு உன் குழந்தைகளுக்கு என்ன சேர்த்து வைக்கப் போகிறாய் ? " என்றார் ,என் அம்மா
மாமாவுக்கு என்ன பேசுவது என தயக்கம் . ஒரு வகையில் நான் மருமகனாயிற்றே !
பதிலுக்கு நான் ," அம்மா , நான் செய்தது தவறு எனப் பட்டால் , அந்த நிலத்தில் எனக்காக
வரும் பங்கில் குறைத்து கொள்ளுங்கள். இதனால் நான் தாழ்ந்து விட மாட்டேன்."
கோபமாக சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
இந்த சம்பவத்திலிருந்து , எங்கள் தோட்டத்தை பராமரிபவரிடமிருந்து எந்த புகாரும் வரவில்லை.
இரண்டு மாதங்கள் சென்று இருக்கும் .
ஒரு நாள் தோட்டத்தை பராமரிக்கும் உறவினர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.
பக்கத்துக்கு தோட்டக்காரர் பைக் விபத்தில் இறந்து விட்டதாகச் சொன்னார்.
எனக்கு இருந்த வேலைச் சுமையில் உடனே சென்று துக்கம் விசாரிக்க முடியவில்லை.
ஒரு வாரம் கழித்து அவர்கள் வீட்டிற்க்குச் சென்று ,துக்கம் விசாரித்துவிட்டு , எங்கள்
தோட்டத்தை சுற்றி வந்து கொண்டு இருந்தேன் .
அப்போது பக்கத்து தோட்டத்தின் ஒரு மூலையில் , ஒரு சமாதி கட்டி முடியும் தருவாயில்
இருந்தது .அது பக்கத்து தோட்டக்காரரின் சமாதி .,
இரண்டு கொத்தனார்கள் வேலையின் போது பேசிகொண்டிருந்தார்கள்.
" எவ்வளவு ரேட் பேசியிருக்கே ? "
" மொத்தம் பத்து சதுர அடி வருது , ஒரு சதுர அடிக்கு ஐம்பது வீதம் ஐந்நூறு பேசி உள்ளேன் "
பளீரென என் மூலையில் ஒரு மின்னல் .
" அட ! நண்பர் தனக்காகத்தான் இவ்வளவு நாள் போராடி , எங்களிடமிருந்து அந்த
பத்து சதுர அடி நிலத்தைப் பெற்றுக் கொண்டாரா ?!
அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்தேன் .
------------------------------------------------------------------------------------
Download As PDF
No comments:
Post a Comment