Saturday, July 30, 2011

VELINAADU SELLA VENDUMAA ?-2

வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-2

 வெளிநாடு செல்ல வேண்டுமா? பகுதி-2
பகுதி-2

(4)  மேலும் தேர்வின்போது, நாம் ஒத்துக்கொண்ட மாதச் சம்பளம் மற்றும் வேறு சலுகைகளும் சரியாகக் கிடைக்கும்.

ஏனெனில், தேர்வு முடிந்தவுடன் இங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பு கையொப்பம் இட்டு, அதன் பிரதி ஒன்றும் நமக்கு கிடைக்கும்இ

ஆனால் சில வேலை வாய்ப்பு நிறுவனங்களில் இங்கு ஒரு ஒப்பந்தமும், வெளிநாடு சென்றபின் ஒரு ஒப்பந்தமும் கொடுத்து கையொப்பம் இடும்படி வற்புறுத்தப்படுவார்கள்.

கடன் வாங்கியோ, காட்டை, வீட்டை விற்று வெளிநாடு செல்பவர்களுக்கு, வேறு வழியில்லாமல் வெளிநாட்டு நிறுவனம் வற்புறுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும்படி நேரிடுகிறது.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் மேற்கண்ட பிரச்சினை கிடையாது.

ஏதாவது பிரச்சினை என்றாலும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சரி செய்து விடலாம்.

வெளிநாடுகளில் படித்தவர்களுக்கு மட்டும் தான் பணிவாய்ப்பு என நினைக்கக்கூடாது.

அனைத்து வகை தொழிலாளிகளுக்கும் வேலை வாய்ப்பு உண்டு. குறிப்பாக உதவியாளர், மேசன், டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன் என தொழிற் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் என்ஜீனியந, டாக்டர், பேராசிரியர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உண்டு.  குறைந்தது இரண்டு வருட பயிற்சி அவசியம்.


(5) வெளிநாட்டு நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?


நாம் ஒரு விளம்பரத்தைப் பார்க்கிறோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் பயிற்சி நம்மிடம் உள்ளதா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

அடுத்து விளம்பரம் கொடுத்த வேலை வாய்ப்பு நிறுவனம் நம்பத் தகுந்ததாக மற்றும் பதிவு எண் கொடுக்கப்பட்டுள்ளதா என பார்க்கவேண்டும்.

இவை இரண்டும் திருப்தியாக இருந்தால், எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என கவனித்து, அந்த வெளிநாட்டு நிறுவனத்தைப் பற்றி அறிய, 'www.வெளிநாட்டு நிறுவனத்தின் பெயர்.com' - என்ற இணையதள முகவரியில் சென்றால், கம்பெனியின் அனைத்து விவரங்களும் நமக்குத் தெளிவாகிவிடும்.

மேலும், அந்நிறுவனத்தைப் பற்றி அறிய வேண்டுமானால், அந்த நாட்டில் உள்ள நமது வெளிநாட்டு தூதரகத்தை (INDIAN EMBASSY) தொடர்பு கொண்டு விசாரித்து தெரிந்து கொள்ளலாம் (E-MAIL).

மேற்கொண்ட அனைத்தும் நமக்கு திருப்தி அளித்தால் மட்டுமே நாம் அந்நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவேண்டும்.

இல்லையெனில் அடுத்த நல்ல நிறுவனத்திற்காக காத்திருக்கவேண்டும்.


(6) நேர்முகத் தேர்வின்போது கவனிக்க வேண்டியவை

ஆள்பாதி. ஆடை பாதி என்பது போல் முதலில் நாம் மற்றவர் கவரும் வகையில் உடை அணியவேண்டும்.

இரண்டாவது நாம் எந்த பணிக்குத் தேர்வுக்கு செல்கிறோமோ அதில் முழு அளவு திறன் படைத்தவராக இருக்கவேண்டும்.

மூன்றாவது, நம் கையில் இருக்கும் பணிச் சான்றிதழில் என்னவெல்லாம் நமக்குத் தெரியும் என குறிப்பிட்டு உள்ளோமோ அதில் தெளிவாக இருக்கவேண்டும்.

குறிப்பாக எனக்கு இந்த எந்திரத்தில் இயக்குதலும் பேணுதலும் (OPERATION AND MAINTENANCE) முழுமையாகத் தெரியும் என்று  குறிப்பிட்டிருந்தால், அந்த எந்திரத்தின் முழு பாகுபாடு நமக்கு அறிதல் வேண்டும்.

இதைவிட்டு நமக்கு இது தெரியும், அது தெரியும் என குறிப்பிட்டு, மேலோட்டமாக நுனிப்புல் மேய்த்திருந்தால் தேர்வின் முதல் சுற்றிலேயே நாம் தோல்வி அடைய நேரிடும்.

நான்காவது, நமக்கு சிறிதளவாவது  ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்காவது பதில் அளிக்கவேண்டும்.

சரி, நாம் தேர்வில் வெற்றி பெற்று விட்டடீம். அடுத்தது என்ன?


(7) மருத்துவச் சான்றிதழ் பெறும் முறை


தேர்வில் வெற்றி பெற்றவுடன், நமது கடவுச் சீட்டை வேலை வாய்ப்பு நிறுவனம் பெற்றுக் கொண்டு, நமக்கு மருத்துவச் சான்றிதழ் பெற அந்நிறுவனம் வழி செய்யும்.

அதாவது, நாம் எந்த நாட்டுக்குச் செல்லப் போகிறோமோ அந்நாட்டின் அனுமதி பெற்ற மருத்துவர்கள் இங்கு உள்ளார்கள். அவர்களிடம் சென்று, வேலை வாய்ப்பு நிறுவனம் கொடுத்த கடிதத்தை காண்பித்து, மருத்துவ பரிசோதனைக்கு தயாராகி விட வேண்டும். மருத்துவ சோதனைக்கு அந்த மருத்துவர்கள் குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்வார்கள் (சுமார் ரூ.1000).

எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், ரத்தப் பரிசோதனை இவை அனைத்தும் முடிந்த பிறகு, கடைசியாக தலைமை மருத்துவர் நம் உடல் பகுதி முழுதும் ஏதாவது குறை உள்ளதா என பரிசோதித்து பார்ப்பார்.

பிறகு, மருத்துவ பரிசோதனைச் சான்றிதழில் (FIT) -தகுதி- என முத்திரை குத்தப்பட்டு, வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு மறுநாள் சென்றுவிடும்.

நிறுவனத்திலிருந்து உங்களுக்கு தபால் அல்லது தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துவிடும்.

இனி, நீங்கள் விமானத்தில் பயணம் செய்வது பற்றி கனவு காணலாம்.

அதற்கு முன் உங்கள் கடவுச் சீட்டில் 'விசா' என்ற 'பணி அனுமதி' (WORK PERMIT) எவ்வாறு பதிவாகிறது என பார்ப்போம்.
                                                                                                                                                    .......தொடரும்
-முத்து ரத்தினம்

Download As PDF

No comments:

Post a Comment