Saturday, July 9, 2011

KOODAA NATPU...........

                       கூடா நட்பு ..........
                      ------------------------------

   எங்கள்  பகுதியில் சீரங்காயி அம்மாள்  என்றால் தெரியாதவர்கள் யாருமில்லை.
  அவருடைய வீட்டின் முன் பகுதியில் மளிகைக் கடையும் , இட்லி மற்றும் டீ கடை
 வைத்திருந்தார்.
     அவருடைய கணவர் பழனியப்பன் மில் வேலைக்கு சென்றார். தான் உண்டு தன்
  வேலை உண்டு என இருப்பார்.
    மற்றபடி கடை நிர்வாகம் அனைத்தும் சீரங்காயி வசமே இருந்தது.
  கடையின் பக்கவாட்டில் சிறீய இடம் இருந்தது.அதில் ஒரு தையல் மிஷினை வைத்து
  சீரங்காயியின் தம்பி வேலு துணிகள் தைத்து வந்தான் .
        ஒரளவு பிரபலமானவுடன் , அவன் கடை வீதியில் ,ஒரு கடையைப் பிடித்து
  போய் விட்டான்.
     கிட்டத்தட்ட ஒரு மாதம் சீரங்காயி கடையில் உள்ள மிஷின் ஆளில்லாமல்
  கிடந்தது.
     இந்த சமயத்தில் தான், நமது கதையின் நாயகன் சங்கர் அங்கு வந்தான்.
 பார்ப்பதற்கு ஆள் சிவப்பாக , குள்ளமாக ஆனால் டிப் டாப்பாக உடை அணிந்திருந்தான்.
  அவன் எந்த ஊர் , எப்படி சீரங்க்காயியை சந்தித்தான் , யார் சிபாரிசு செய்தார்கள்
 என்பதெல்லாம் தெரியவில்லை.
   ஆனால் வேலையில் கண்ணாய் இருந்தான். ஆண்கள் பேண்ட், சர்ட் மட்டுமல்ல ,
 பெண்களுக்கான ஜாக்கெட் தைப்பதிலும் கில்லாடியாக இருந்தான்.

       இதனால் அப்பகுதி பெண்கள் அவனிடம் துணி தைக்க கொடுத்தார்கள்.
  அனைவரிடமும் மிக மரியாதையாகப் பழகுவான் .இரவு ஒன்பது அல்லது பத்து
  மணிக்கு கடையிலிருந்து தனது ரூமுக்குச் செல்வான்.
     சீரங்காயி கடையின் நான்கு வீடு தள்ளி குடியிருந்த, நாமக்கல்லைச் சார்ந்த விஜயா
 என்ற பெண்ணிடம் சங்கருக்கு நெருக்கம் அதிகம் ஆகி இருந்தது.
   இதில் என்ன பிரச்னை என்றால், விஜயாவிற்கு முன்னமேயே கல்யாணம் ஆகி இருந்தது.
   இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை வேற இருந்தது.
      இதில் யார் மேல் தப்பு என அறியாத வயது எனக்கு.!
  விஜயா பார்க்க அழகாக இருப்பார். சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும். நல்ல நிறம்.
   நல்ல குடும்பத்தை சார்ந்தவர் தான் , எதை வைத்து சங்கரை விரும்பினால் என்பது
  தெரியவில்லை.
   விஜயாவின் கணவர் தற்போது உள்ள வீட்டைக் காலி செய்துவிட்டு , எங்கள்
 தெருவுக்கு ,அடுத்த தெருவுக்கு வீட்டை மாற்றினார்.
     ஒரு சமயம் அரசல் புரசலாக விசயம் அவருக்கு தெரியுமோ என்னவோ ?!
  எனக்கு அப்போது பதினைந்து வயது இருக்கும்.பக்கத்து தெரு என்பதால்
  விஜயா எங்கம்மாவிற்கு பழக்கமானார்.
  ஊரிலிருந்து விஜயாவின் அப்பா, அம்மா வந்தால் எங்கள் வீட்டிற்கும் வந்து செல்வார்கள்.
     ஒரு நாள் சீரங்காயி கடையில் தன் தம்பி வேலுவைக் கூப்பிட்டு " நான் பாங்க் வரை
 போய் வருகிறேன் , பாங்க்கிலிருந்து நகையை திருப்பச் சொல்லி இருக்கிறார்கள்.
 நீ கடையில் இரு , மாமா வேலைக்குச் சென்று விட்டார். ஒரு மணிக்குள் வந்து விடுகிறேன் "-
  எனச் சொல்லி விட்டு பாங்க்குக்கு சென்று விட்டார்.
     தம்பி கடையை பார்த்துக் கொண்டான்.
    வேலுவும், சங்கரும் டைலர்கள் அல்லவா ? அதனால் தங்கள் தொழில் பற்றி அரட்டை
அடித்தனர்.
 சங்கர் வந்து இரண்டு வருடங்களாகி விட்டதால் சீரங்க்காயி குடும்ப விவகாரங்கள்
 அனைத்தும் அவனுக்குத் தெரியும்.
  மதியம் பண்ணிரண்டு வாக்கில் பாங்க்கில் இருந்து வந்த சீரங்காயி, வேலுவிடம்,
  "இந்தாப்பா ,இந்த நகைகளை அலமாரியில் வைத்து பூட்டி வை.பத்திரம், முப்பது பவுன்."-
 என்றார்.
   வேலுவும் அலமாரியில் நகைகளை வைத்து பூட்டி , மறுபடியும் சாவியை சீரங்காயிடம்
  கொடுத்தான்.
   அதற்கு சீரங்காயி, " சாவியை கொண்டு போய் தலையனை அடியில் வை "-என்றார்.
  சீரங்காயி செய்த தவறு அது தான்.

       மறு நாள் பொழுது விடிந்தது.
 சீரங்காயியின் கணவர் தான் அலமாரியை முதலில் பார்த்தார். "ஏண்டி, சீரங்காயி
  என்னடி அலமாரி திறந்து கிடக்குது, திறந்தால் பூட்ட மாட்டியா? "-என்றார்.
     கடையில் டீ போட்டுக்கொண்டிருந்த சீரங்காயி ஓடி வந்தார் .
  வந்தவர் முதலில் நகைகளைத் தான் பார்த்தார். நகைகள் இல்லை.!
  ஏற்கனவே அவர் வாயாடி .குய்யோ முறையோ என சப்தம் போட்டு தெருவே கூடி
  விட்டது.

        அனைவரும் " நல்லா பாரு , முப்பது பவுன் "- என்றனர்.
 நகை எப்படிக் கிடைக்கும் ? அது தான் இரவே திருட்டுப் போய் விட்டது.
   சீரங்காயி தம்பி வேலு விசயம் கேலள்விப்பட்டு ஓடி வந்தான். அவனும் அலமாரி
 முழுக்க அலசினான்.
   பிறகு  அனைவரும் , ஒரு முடிவு செய்து, காவல் நிலையத்தில் புகார் கொடுக்க
 முடிவாகியது.
    அந்த காலத்தில் முப்பது பவுன் என்பது சாதாரணமல்ல. போலீஸ் சுறுசுறுப்பானது.
 
 சேலத்திலிருந்து மோப்ப நாய் வந்தது. வீட்டிற்குள் ஓடியது. பிறகு வெளியே சிறிது
 தூரம் ஓடி நின்று விட்டது. ஒன்றும் பலனில்லை.

   சீரங்காயி வீட்டை ஒட்டி தென்னை மரம் ஒன்று இருந்தது.
 வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் , குற்றவாளி எப்படி வீட்டிற்குள் சென்று இருப்பான்,
 என சிந்தித்து விட்டு , வீட்டைச் சுற்றி வந்தவர் ,தென்னை மரத்தின் மேல் ஏறி மாடியில்
 குதிக்க முடியுமா "- என நினைத்தார்.
     அதன்படி சீரங்க்காயியின் தம்பி வேலுவை மரத்தில் ஏறச் செய்தார்.
  மாடி கைப்பிடிச் சுவருக்கும் , தென்னை மரத்திற்கும் இரண்டடி தான் இடை வெளி இருந்தது.
      வேலு துணிச்சலாக மரத்தில் ஏறி மாடியில் குதித்தான்.
 இன்ஸ்பெக்டருக்கு விசயம் தெளிவாயிற்று .

  சீரங்காயி மற்றும் கணவரிடம் இண்ஸ்பெக்டர் துருவி துருவி விசாரித்தார்.
 " நீங்கள் பாங்க்கிலிருந்து நகை திருப்பி வரும் விசயம் யார் , யாருக்குத் தெரியும்?"
    " கடைக்கு நிறைய பேர் வருவார்கள், போவார்கள் யாரை சொல்வது ?"-
 என்றார்கள் இருவரும்.
   இவ்வளவு களோபரத்துக்கு இடையிலும் டைலர் சங்கரை அனைவரும் மறந்து
 விட்டிருந்தனர்.
  வேலு தான் இன்ஸ்பெக்டரிடம் விசயத்தை எடுத்து விட்டான் ." சார், அன்னைக்கு
 அக்கா பாங்க்குக்கு போகும்போது நானும், சங்கரும் தான் பேசிக்கொண்டிருந்டோம்.
என்றான்.
  " இப்போ அவன் எங்கே ?"-இன்ஸ்பெக்டர்.
  சீரங்காயி, " நேற்று உடம்பு சரியில்லை என போனவன் இன்னும் வரவில்லை,
 அவன் தங்கமானவன் , அவன் என் தம்பி போல"
   இருந்தாலும் இன்ஸ்பெக்டருக்கு சங்கர் மேல் குற்றம் வலுத்தது.
 அவனைப் பற்றிய விசாரனையில் இறங்கினார்.
 அவனுடைய ரூமைப் பார்த்தால் பூட்டி இருந்தது.
   பூட்டை உடைத்து , உள்ளே பார்த்ததில் எந்த தடயமும் இல்லை .
 ஒரு பெட்டி,மற்றும் சில துணிகள் மட்டும் இருந்தது.
      போலீஸ் விசாரனையில் விஜயா விவகாரமும் வெளி வந்தது. அவளிடமும்
 இன்ஸ்பெக்டர் விசாரனை நடத்தினார்.
     " அவனுக்கும் , எனக்கும் எந்த தொடர்புமில்லை. தயவு செய்து எங்கள்
 குடும்பத்தில் எந்த குழப்பத்தையும் உண்டு பண்ணாதீங்க " -என விஜயா கேட்டுக்
கொண்டதின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயாவிடம் விசாரனையை அத்துடன் நிறுத்திக்
 கொண்டார்..
     சங்கருடைய ஊருக்குச் சென்று விசாரித்ததில் அவன் இங்கு வந்து ஒரு மாதத்திற்கு
 மேல் ஆகிறது -என்றார்கள்.
  கிட்டத்தட்ட சங்கர் தான் குற்றவாளி என்பதில் இன்ஸ்பெக்டர் உறுதியானார்.
 பல இடங்களில் போலீஸ் இன்பார்மர்களை அமர்த்தினார்.
    அதில் ஒருவர் ரங்க்கசாமி. அதாவது விஜயா குடியிருந்த வீட்டின் உரிமையாளர்.
 அவர் ஒரு தனிக்கட்டை. தெரு ஓரத்தில் தான் கட்டில் போட்டு படுத்து இருப்பார்.
 அவரும் மில்லுக்குத்தான் வேலைக்குச் சென்று வந்தார்.அவருக்கு ஸிப்ட் முறை.

         ஒரு மாதம் கழித்து , ஸிப்ட் முடிந்து, இரவு பண்ணிரண்டு மணிக்கு வந்த
ரங்கசாமி வீட்டிற்கு வெளியே உள்ள கட்டிலில் படுத்திருந்தார்.
    அன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவர் , காலடி சப்தம் கேட்டு ,
 கட்டிலை விட்டு அசையாமல் கண்கானித்தார்.
  ஒரு உருவம் வேக வேகமாகச் சென்று , விஜயாவின் வீட்டு கதவைத் தட்டியது.
 அவன் உள்ளே சென்றதும், கதவு சாத்தப்பட்டு விட்டது
    ரங்க்கசாமி உஸார்  ஆனார். வந்தவன் விஜயாவின் கணவன் அல்ல .இரண்டு
 நாளாக அவன் ஊரில் இல்லை.
   வேகமாக , ஒரு பர்லாங்க் தூரத்தில் உள்ள இன்ஸ்பெக்டரின் வீட்டிற்க்குச் சென்று
 விசயத்தை சொன்னார்.
 
      இன்ஸ்பெக்டர் பிஸ்டலை எடுத்து சரி பார்த்து, துணைக்கு இரண்டு காண்ஸ்டபிள்களையும்
 கூட்டிக்கொண்டு விஜயா வீட்டிற்கு வந்தார்.
    வரும் வழியே வேலுவையும் கூட்டி வந்தார்.
    " நாங்கள் கதவைத் தட்டினால் பிரச்னை, நாங்கள் மறைந்து கொள்கிறோம் ,நீ கதவைத்
 தட்டு "- என வேலுவுக்கு இன்ஸ்பெக்டர் உத்தரவு கொடுத்து விட்டு,மறைந்து காத்து இருந்தார்.
  அதன் படியே வேலு கதவைத் தட்டினான்.
       "யாரது "- விஜயாவின் குரல் தான்.
 " நான் தான்  வேலு , சீரங்காயீ தம்பி, ஒரு முக்கியமான விசயம் , கதவைத் திற "-என்றான்.
   கதவைத் திறந்த விஜயா, "என்ன விசயம் "-என்றாள். 
  உள்ளே வேலு கண்களில் சாப்பிட்ட தட்டு பாதி நிலையில் தென்பட ," என்ன , இப்போ சாப்பிடறே "-
  என அவள் கையைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி ! கை சுத்தமாக இருந்தது .கதவிடுக்கில்
 ஒரு உருவம் நிற்பது தெரிந்தது.
     உடன் ," இன்ஸ்பெக்டர் வாங்க , வாங்க ஓடியாங்க "-என சப்தம் போட்டான்.
  இன்ஸ்பெக்டர் ஓடி வருவதற்கும் , சங்கர் கையில் கத்தியுடன் வேலு மேல் பாய , வேலு
 கையில் சிறிய காயத்துடன் தப்பித்தான்.
   இன்ஸ்பெக்டர் பிஸ்டலைக் காட்டவும் கத்தியைக் கீழ் போட்டான் ,சங்கர். இரண்டு கான்ஸ்டபிள்களும்
 அவனைப் பிடித்துக் கொண்டனர்.

       சங்கரை ஸ்டேசனுக்கு கூட்டி வந்து , இன்ஸ்பெக்டர் அவருடைய பாணியில் விசாரித்தவுடன்
  எல்லா விசயத்தையும் கக்கினான். விஜயாவும் உடன் இருந்தாள்
  அவள் எதுவுமே பேசவில்லை.கண்களில் மட்டும் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

        சங்கர் மேல் ஏற்கனவே ஒரு கொள்ளை கேஸ் இருந்ததை ஒப்புக் கொண்டான்.
   தான் சீரங்காயி வீட்டின் உள்ளே எப்படி சென்றான் என்பதை அவனே தென்னை மரத்தின்
  மீது ஏறி , மாடி மேல் குதித்து ,உள்ளே சென்று காண்பித்தான்.
    சீரங்காயியின் தலையனை அடியில் இருந்து , சாவியை எடுத்து ,அலமாரியில் இருந்து
 நகைகளை எடுத்ததாக ஒப்புக் கொண்டான்.
    இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் சொன்னான்.
       சீரங்காயி விழித்து இருந்தால் , அவரை கத்தியால் குத்த திட்டம் போட்டிருந்ததையும்
  சொன்னான்.
      இதை அருகிலுருந்து கேட்ட சீரங்காயி " அடப்பாவி, உன்னை என் தம்பி போல
  நடத்தினேனே , நீ நாசமாக போக "-என திட்டினாள்.
    நகைகளை திருடிய அன்றே , விஜயாவின் வீட்டு மேற் சட்டத்தில் மறைத்து வைத்து
 விட்டதாகச் சொன்னான்.
   சங்கரை சிறையில் அடைத்துவிட்டு ,விஜயாவுடன் வீட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர்
 அவள் காட்டிய மேற் சட்டத்தின் கூரையில் இருந்து , துணிப் பையில் வைத்திருந்த
 நகைகளை எடுத்துக் கொண்டார்.
          " நாளைக் காலை நீ ஸ்டேசனுக்கு வர வேண்டும் "- என விஜயாவிடம் சொல்லி விடு,
 வீட்டு ஓனர் ரங்கசாமியிடம் " விஜயா எங்கும் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,
 உங்களுக்கு உதவியாக ஒரு காண்ஸ்டபிள் இங்கு இருப்பார்."என்றார் இன்ஸ்பெக்டர்.
     ரங்க்கசாமியும் ,"சரி "- என்றார்.

        இத்தனை நிகழ்ச்சிகளையும் அந்த தெருவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது,
  விஜயா கலங்கிய கண்களுடன் வீட்டின் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
   குழந்தை பாயில் தூங்கிக் கொண்டிருந்தது.

          மறு நாள் காலை ஏழு மணி அளவில் விஜயாவின் குழந்தை அழும் குரல் கேட்டு
 ரங்கசாமியும், காவல் இருந்த காண்ஸ்டபிளும் கதவைத் தட்டினார்கள்.
     குழந்தை அழுது கொண்டே கதவைத் திறந்தது
      உள்ளே பார்த்த ரங்கசாமி அதிர்ச்சியுற்றார்.
  மேல் உத்திரத்தில் புடவைத் தலைப்பில் தூக்கு போட்டு விஜயா தொங்கிக் கொண்டிருந்தாள்.

           விசயம் கேள்விப் பட்டு இண்ஸ்பெக்டர் வந்தார்.
   போஸ்ட்மார்ட்டம் முடிந்து விஜயாவின் சடலம் நாமக்கல்லுக்கு பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

     என் அம்மாவுடன் இறுதிச் சடங்க்கிற்கு நானும் நாமக்கல் சென்றேன்.
  தலையில் கட்டுடன் , மாலையுடன். ஏதும் நடக்காதது போல் தூங்கிக் கொண்டிருந்தாள், விஜயா.!
     தலை மாட்டில் ,அவள் பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது.

Download As PDF

No comments:

Post a Comment