Thursday, August 11, 2011

என் சுவாசம் நீ


என் சுவாசம் நீ



     மூச்சுக் காற்றாய் நீ, என் இதயத்தை தொட்டாய்,

     எல்லையில்லா நம் காதலுக்கு விதை விதைத்தாய்,

     காதல் பயிர் வளர கண்களால் உரம்  இட்டாய்,

     அன்பு மொழி பேசி, நீர் வார்த்தாய்.!

     இடையில் தடைகளை களை எடுத்தாய்,

     கண்ணுக்கு இமையாக, வேலி அமைத்தாய் ,

     பெற்றவர் மனம் அறிய, பேசத் துடித்தாய்,

     சாதிப்பூச்சி அகல, பூச்சிக் கொல்லி தேடினாய்.

    காலம் கனிந்து, பச்சைக் கொடி காட்டினாய்,

     கல்யாணக் களைவந்து முகம் சிவந்தாய்,

     பொன்னி நெல் கதிர் போல் தலை குனிந்தாய்,

     திருமண  நாள், அது அறுவடை நாள்.


-முத்து ரத்தினம்
Download As PDF

Wednesday, August 3, 2011

திண்ணைப் பள்ளிக்கூடம்.


அன்னை கைப்பிடிக்க, அழுது புரண்டு, வேண்டா வெறுப்பாக
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் புகுந்தேன்..!
கண்ணில் பட்டதோ கையில் பிரம்புடன் பயமுறுத்தும் ஆசிரியை, 
மிரட்சியுடன் அன்னை கைப்பற்றி தரையில் அமர்ந்தேன் நான்...!
  
தினம் தினம் அன்னை பாதுகாப்புடன் பள்ளிக்கு பயணம்
சிலசமயம் எடுப்பேன் ஓட்டம், பின்னால் துரத்தும் கூட்டம்..!
பிரம்புடன் அன்னை, பலபேருக்கு டிமிக்கி, வீட்டில் சிறை
விடிந்ததும் மீண்டும் வழக்கம் போல் திண்ணைப் பள்ளிக்கூடம்..!
 
கழிந்தன காலம், தொடர்ந்தன வகுப்புகள்
மூன்றாம் வகுப்பு, படிப்பில் ஏதோ ஒரு பிடிப்பு !
முதல் மார்க் வாங்க வேண்டும் என துடிப்பு,
கோ-எஜிகேசன் படிப்பு...! அதுவும் ஒரு சிறப்பு..!
 
இன்றும் மனம் அசை போடும், என் பள்ளியைப் பார்த்தால்.!
அன்றைய நினைவுகளும், என் மனதில் தோன்றும் அழியா உருவங்களும்!
முதல் வகுப்பை தொடங்கினேன் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அன்று...! 
முதல் மாணவனாக தேறினேன் பல்கலைக்கழகத் தேர்வில் இன்று..!

அன்னை கைப்பிடிக்க அன்று சென்ற திண்ணைப் பள்ளிக்கூடம்
என்னை மட்டுமின்றி இன்று பலரது வாழ்க்கையில் ஒளியேற்றிய ஓடம்..!
வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட திண்ணைப் பள்ளிக்கூடம்..!
வாழும்போதுதான் தெரிந்தது அது ஒரு அழகிய கலைக்கூடம்..!

-முத்து ரத்தினம்
 திண்ணைப் பள்ளிக்கூடம்.
Aug 03, 2011
Download As PDF