Saturday, July 9, 2011

BISCUIT vs ALVAA

பிஸ்கட் vs அல்வா ( முத்து ரத்தினம் )
-----------------------------------------
மேலிடத்திலிருந்து ஏக பிரஷர் . போன மாதத்தில் மட்டும் நான்கு தடவை

ரயில்வே கொள்ளை.
எங்களுக்கு கிடைத்த க்ளு இவை தான் . " கொள்ளை அடிப்பவன் சுமார் 25 - லிருந்து
30 -வயதுக்குள் இருப்பான். எல்லாக் கொள்ளையிலுமே பிஸ்கட் கொடுத்து தான்
மயக்க வைத்து , நகை, பணம் திருடி இருக்கிறான். இரவு நேரத்தில் மட்டுமே தன் கை
வரிசையைக் காட்டுகிறான்.

நானும் , என் மனைவியாக நடித்த இன்ஸ்பெக்டர் பிரபாவும் கோவை டு சென்னை
மற்றும் சென்னை டு கோவை ஐந்து முறை பயணம் செய்தாகி விட்டது. "எலி "அகப்படவில்லை.

எங்கள் எஸ். பி. யும் , " வேறு ஏதாவது வழி இருக்கிறதா , பாருங்கள்" - என்றார்.

" சார், இந்த ஒரு முறை கடைசி தடவையாக இருக்கட்டும் . பிறகு வேறு வழி யோசிப்போம்."
என்றேன் . வேண்டா வெறுப்பாக " சரி போங்கள் "- என்றார் , எஸ். பி.

டிக்கெட் ஏற்கனவே ரிசர்வ் செய்யப்பட்டிருந்த பெட்டிக்கு வெளியே , வழக்கத்திற்கு
மாறாக அரை மணி முன்னதாக சென்று பிளாட்பாரத்தில் காத்திருந்தோம் .

இன்ஸ்பெக்டர் பிரபாவும் அன்று மிக அதிகமாக நகைகள் அணிந்திருந்தார் .

கோவை எக்ஸ்பிரஸ் , திருப்பூரை அடைந்தது . டிப்- டாப்பான வாலிபன் ஒருவன்
கையில் சூட் கேசுடன் ஒவ்வொரு பெட்டியாக பார்த்துக்கொண்டே வந்து ,எங்கள்
பெட்டியில் ஏறினான் . மணி இரவு 8 /30 .

எங்களைப் பார்த்து லேசாக சிரித்தபடியே " நான் அவசரமாக சென்னை செல்ல வேண்டும் ,
டிக்கெட் வேறு எடுக்கவில்லை ." -என்றான் .

டி. டி . ஆர் . வந்தவுடன் அவரிடம் விசயத்தைச் சொல்லி , டிக்கெட்டும் வாங்கிக் கொண்டான் .

இரவு 10 -00 மணி . நான் வார இதழில் மூழ்கியிருந்தேன் . பிரபாவிடம் ஓரிரு
வார்த்தை பேசியவன் , தன் பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தான் .

வண்டி ஈரோட்டை தாண்டியிருந்தது .

இரண்டு பிஸ்கட் சாப்பிட்டவுடன் , இரண்டு பிஸ்கட்டை என் மனைவி (இன்ஸ்பெக்டர் )பிரபாவிடம் நீட்டினான்.

பிரபா என்னைப் பார்த்தாள் . எனக்கு லேசாக பொறி தட்டியது. ஒரு வேலை அந்த
"எலி" இவனாக இருப்பானோ ? !

நான் பிரபாவிடம் " தம்பி ஆசையாக தருகிறார் , வாங்கி சாப்பிடு " - நான் கூறிய
விதத்தை புரிந்து கொண்டு , தைரியமாக அவனிடம் பிஸ்கட்டை வாங்கி சாப்பிட்டாள்.

நான் , ' தம்பிக்கு நாம் செய்த ஸ்பெஷல் அல்வாவைக் கொடு "- என்றேன் .

முதலில் வாங்க தயங்கிய அவனிடம் , தைரியமா வாங்கி சாப்பிடு தம்பி , இது நாங்க வீட்டில்
செய்தது . ஒரிஜினல் ஊத்துக்குளி நெய் ."- என்றதும் அல்வாவை சாப்பிட்டான் .

எனக்கும் இரண்டு பிஸ்கட் கொடுத்தான்.
வண்டி சேலத்தை அடைந்தது. பிரபா தனக்கு தூக்கம் வருவதாகச் சொல்லி
பர்த்தில் படுத்து விட்டாள்.

நான் அந்த வாலிபனிடம் ," தம்பி , இந்த பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர்
பிடித்து வருகிறாயா ?"- என்றேன் .

அவன் கிழே இறங்கியதும் , அவன் என்னிடம் கொடுத்த பிஸ்கட் -ஐ பையின்
உள்ளே வைத்துவிட்டு பிஸ்கட் -ஐ சாப்பிட்டது மாதிரி நடித்தேன் .

வண்டி சேலத்தை விட்டு புறப்பட்டது. நான் தண்ணீர் குடித்து விட்டு , மேல்
பர்த்தில் படுத்து தூங்குவது போல நடித்தேன்.

கால் மணி நேரம் சென்று இருக்கும்.
அந்த பெட்டியில் இருந்த அனைவரும் தூங்க ஆரம்பித்தனர்.
நான் நினைத்தபடியே , அவன் எழுந்தான். பிரபாவை நெருங்கி , ஒவ்வொரு நகையாக
கழட்ட ஆரம்பித்தான்.

பிரபாவிடம் சிறிதும் சலனமில்லை . பிஸ்கட் வேலை செய்து இருக்க வேண்டும் .

என்னையும் அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டான் .

பிறகு எல்லா நகைகளையும் அவனுடைய பையில் வைத்து விட்டு திரும்பியவன் ,
தள்ளாடியபடியே கீழே சுருண்டு விழுந்தான் .

நாங்கள் கொடுத்த அல்வா வேலை செய்கிறது போலும் .

நான் கொடுத்த செல் தகவல் மூலம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் , ரயில்வே
போலீஸ் காத்திருந்தது.

பிரபாவிற்கு மயக்கம் தெளிவித்து , மறுநாள் காலை , வாணியம்பாடியிலிருந்து
கோவைக்கு காரில் வந்து சேர்ந்தோம் .

எல்லா நாளிதழ்களிலும் , முதல் பக்கத்தில் , நானும் ,பிரபாவும் உள்ள போட்டோவும்
, எங்களின் சாகச செய்தியும் தான் .!

---------------------------------------------------- Download As PDF

No comments:

Post a Comment