Wednesday, May 2, 2012

தமிழகமும் - இலவசமும்

தமிழகமும் - இலவசமும்

இன்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் தாங்கள் ஆட்சியில் அமர்வதற்காக, பல இலவசங்களை தருவதாக வாக்களிக்கின்றனர். முதன் முதலில் தமிழகத்தில் இலவசத்தை அறிமுகப்படுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.

இலவச மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் கொண்டு வந்தார். அவர் அறிமுகப்படுத்திய இலவச மதிய உணவுத் திட்டத்தில், உண்மையிலேயே நல்ல எண்ணம் இருந்தது. அதாவது கல்விக்கு கண் திறந்த காமராஜர், எப்படியாவது அனைவருக்கும் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர, ஏழை-எளிய மக்களுக்கு அவர்கள் குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்தாவது, (சாப்பாட்டுக்காவது) பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குவார்கள் என நினைத்தார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். அடுத்து இந்த மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி, அடுத்து வெற்றி கண்டவர் எம்ஜிஆர் அவர்கள்.

பொதுவாக மக்கள் இலவசத்திற்கு அதிகமாக மயங்குவார்கள் என்று, அரசியல் கட்சிகள் தற்போது மந்திரங்களாக அறிவிக்கும் இலவசத் திட்டங்கள்.

ஒரு கணக்கை பார்ப்போம்.

ஒரு புடவை எடுத்தால், இன்னொன்று இலவசம் என ஒரு கடைக்காரன் விளம்பரப்படுத்துகிறான் என வைத்துக்கொள்வோம். அங்கே அறியாமை மக்கள் கூட்டம் அலை மோதும். இரண்டு புடவைக்கும் சேர்த்துதான் ஒரு புடவையில் விலையை வைத்து விளம்பரம் செய்கிறான் என அறிவாளி சிந்தித்தானானால், அந்த கடைக்கு எவனும் செல்லமாட்டான்.

இன்னொரு விதமாகவும் சிந்திக்கவேண்டும். இப்படி ஒரு புடவைக்கான உண்மையான விலையையே வைத்து, ஒரு புடவைக்கு இன்னொரு புடவை இலவசம் என்று கொடுத்தால், அந்த கடைக்காரன் ஒரு வாரத்தில் கடையை மூடிவிட்டு போண்டியாகிவிடுவான். இது உண்மை.

சரி, இப்போது அரசியல்வாதிகளின் இலவச திட்டங்களுக்கு வருவோம்.

அது தருகிறோம், இது தருகிறோம் என மக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறும் அரசியல்வாதிகளுக்கு பொருட்கள் வாங்க எங்கிருந்து பணம் வருகிறது? மக்கள் வரி பணத்தை மக்களுக்கே இலவசமாக தந்து யாருடைய பணத்தில் இவர்கள் குளிர்காய நினைக்கிறார்கள்?

ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் உள்ளது என இவர்களுக்கு தெரியுமா? இந்தியாவுக்கு அயல் நாட்டிடம் எவ்வளவு கடன் உள்ளது என்றுதான் தெரியுமா? யாருடைய பணம் சுவிஸ் வங்கிகளில் கோடி கோடியாகக் கொட்டிக் கிடக்கிறது?

சுவிஸ் வங்கிகளில் உள்ள அரசியல்வாதிகளின் பணத்தை எடுத்தாலே, இந்தியாவின் கடனை அடைத்துவிடலாமே.! அதற்கு ஏதேனும் முயற்சி உண்டா..?! எந்த குடிமகன் கேட்டான்..?! எனக்கு இலவசம் வேண்டும் என்று..!

தன்மானத்தை அடகுவைத்து இலவசங்களை வாங்க தன்மானத் தமிழன் ஒத்துக் கொள்வானா?

கடைசியாக அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்...!

மீனை தராதீர்கள். மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்.

இலவச படிப்பை தாருங்கள். வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்குங்கள்.
Download As PDF

No comments:

Post a Comment